மார்கழி மாதமும் மியூசிக் சீசனும் பூவும் வாசனையும் போல பின்னி பிணைந்து வெகு வருடங்களாகி விட்டன.
மார்கழிக்கு வேறு பெயர் எவரேனும் சூட்ட எண்ணினால் "மியூசிக்" அல்லது "இசை"என்று பெயர் வைப்பது கூட பொருத்தமாக இருக்கும்.
சிறு வயதில் நான் பிறந்து வளர்ந்த ஊரில், மார்கழியில் பல பஜனை கோஷ்டிகளுக்கு ரொம்ப கிராக்கி-ஊரிலிருந்த அத்தனை கோவில்களும் இவ்ர்களைத் தேடிப் பிடித்து வந்து விடுவார்கள். தெருவெங்கும் அதிகாலையில் இக்கோஷ்டிகளின் பாடல்கள் ஓலிக்கும்.சிறு வயது என்பதால் எனக்கும் என்னைப்போன்ற மற்ற சிறுவர்களுக்கும் இன்டிரஸ்டான சமாசாரம் பாடல்களுக்கு பிறகு கோவிலில் கிடைக்கும் பொங்கல் பிரசாதம்தான். இதற்காகவே சீக்கிரமாக அதிகாலையிலெழுந்திருந்து குளித்து விட்டு, ஓட்டமாக ஓடிப் போய் இப்பாடல் கோஷ்டிகளுடன் , அர்த்தம் புரிந்தும் புரியாமலும், பாடல்களைப் பாடியதும், இப்போது நினைக்கும் போதும், மனதுக்கு இதமான நினைவுகள்.
அப்போதைக்கும் இப்போதைக்கும் வித்தியாசம்-காலைக்கு பதில் மாலை வேளை- கோவிலுக்கு பதிலாக சங்கீத சபா-பிரசாதத்திற்கு பதில் கேண்டீன் டிபன். மாறாதது இசை மட்டும்தான்.அப்போது பஜனைப் பாடல்கள்- தற்போது கர்னாடக இசையோ-அல்லது தமிழ் இசையோ- அவ்வளவே!அர்த்தம் அப்போதும் புரிந்ததில்லை-இப்பொழுதும் நிறைய பாடகர்கள் பாடும் விதத்தில் அர்த்தம் புரிவது இல்லை!ஆனால் மிக முக்கிய விஷயம் என்னவென்றால் இசை அப்பொழுதும் மயக்கியது- இப்பொழுதும் மயக்குகிறது. அர்த்தம் எத்ற்கு?-வெறுமே கேட்டால் போதும்- நம்மை வேறு உலகிற்கே இட்டுச் சென்று விடும் இசை!
இதோ இந்த பாடலைப் பாருங்கள்:
"சிறு விரல்கள் தடவிப் பரிமாற செங்கண்கோட செய்யவாய் கொப்பளிப்ப
குறுவெயர்புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல்கொடூதினபொழுது
பறவையின் கணங்கள் கூடுதுறந்து வந்துபடுகாடுகிடப்ப
கறவையின் கணங்கள் கால்களைப்பரப்பியிட்டு காதுகளை ஆட்டகில்லாவே"
மாட்டுக் கூட்டங்களை மேய்க்கச் சென்ற கண்ணன் , மேய்ச்சலுக்கு இடையிலே , மரத்தின் நிழலிலே சற்று நின்று கொண்டு தனது புல்லாங்குழலை இசைத்த போது, எப்பொழுதும் சப்தித்துக் கொண்டு பறந்து பறந்து இரை தேடும் பறவைக்கூட்டங்கள் கோவிந்தனின் இசையின் ஓசையில் மயங்கி, தங்களது அலைச்சலையும் ஆரவாரத்தையும் நிறுத்தி விட்டு, கூடுகளிலிருந்து வெளியே வந்து ஓரு சிறு அசைவு கூட இல்லாது குழலோசையில் கட்டுண்டுஇருந்தன; கால் நடைகளின் கூட்டமோ மேய்ச்சலை மறந்து, கால்களைப் பரப்பிக் கொண்டு தரையில் அமர்ந்து கொண்டும், சற்றுக் கூட காதுகளை ஆட்டாமலும், அசைவற்றும், தங்கள் நிலை மறந்து, மற்ற யாவற்றையும் மறந்து அந்த இசையில் லயித்திருந்தன. ஐந்தறிவே உள்ள அவற்றை கோவிந்தனின் அமுத இசை அவ்வாறு கட்டிப் போட்டு விட்டது.
மொழியே என்னவென்று அறியாத உயிரினங்கள் இசையில் மயங்கும் போது, பாடுவதற்கும், கேட்பதற்கும் சக்தி உள்ள நமக்கு, மார்கழி மாதமும், மியூசிக் சீசனும் கிடைப்பதற்கரிய வரங்கள். வார்தைகள் புரியாவிட்டால் என்ன? இசையில் லயிப்போமே!

No comments:
Post a Comment