Wednesday, December 9, 2009

காட்சிப் படலம்


இலங்கை மாநகரில், அனுமன் சீதையைக் காண்பதையும், இராவணனால் அரக்கியர் நடுவிலே சிறை வைக்கப்பட்டிருந்த அன்னை ஜானகியின் திக்கற்ற நிலையையும்,, அவளிடம் அண்ணல் இராமபிரானால் அனுப்பி வைக்கப்பட்ட தூதன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதையும் விவரிக்கும் பாடல்கள் அடங்கியது காட்சிப் படலம்.

"சொல்லின் செல்வன்" ஆகிய ஆஞ்சநேயன், தன்னை அன்னைக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு, ஆதுரமான வார்த்தைகளைக் கூறி, இராமபிரான் படையெடுத்து வந்து உங்களைக் காப்பாற்றுவார் என சீதைக்குநம்பிக்கையூட்டுவதை, கம்பன் தனது பாடல்களிலே வருணிக்கும் அழகு அற்புதம்.

இதோ முதல் பாடல்:
"மாடு நின்ற அம் மணிமலர்ச் சோலையை மருவித்
தேடி, இவ்வழிக் காண்பெனேல், தீரும் என் சிறுமை;
ஊடு கண்டிலென் எனில், பின்னர் உரிய தொன்றில்லை;
வீடு வேன், மற்று இவ் விலங்கல் மேல் இலங்கையை வீட்டி?"

(அருஞ்சொற்கள்: மாடு- அருகில்; விலங்கல்-மலை )

இலங்கையில் , இராவணன், இந்திரஜித்து, விபீஷணன் முதலியோரது அரண்மனைகளிலும், வேறு பல இடங்களிலும் தேடிச் சீதையைக் காணாது, அதுவரையில் செய்த முயற்சிகள் பலன் தராத காரணத்தால், சற்று தன் மீதே கழிவிரக்கம் கொண்ட நிலையில், அனுமன் அசோக வனத்தின் அருகில் வந்து சேருகிறான்.

"இந்த சோலையிலே தேடிச் சீதையைக் காண்பேன் என்றால் எனது துன்பம் தீரும்; இங்கு தேடியும் கிடைக்காவிட்டால் இனி மேற்கொண்டு செய்வதற்கு வேறேதும் இல்லை- அருகிலே இருக்கிற திரிகூட மலை மீது இலங்கை நகரை வீசித் தாக்கி அழிப்பேன்; பின்னர் எனது உயிரையும் மாய்த்துக் கொள்வேன்".

யார் மனத்தில் இந்த எண்ண ஒட்டம்? ஏதோ ஒரு சாமானியன் மனத்திலா?

தேவர்களின் அம்சம் பெற்றவன்-வாயு புத்திரன்; ஐம்புலன்களையும் அடக்கியவன்; அபார தைரியம் உள்ளவன்; மிகுந்த தேக பலமும், மனோ பலமும் ஒரு சேரப் பெற்றவன்; செயற்கரிய செய்கையான- கடலைத் தாண்டியதை வெகு அநாயாசமாகச் செய்தவன்.
அவன் ஒரு பக்கம் எண்ணுகிறான்- மலையை வீசி நகரை அழிப்பேனென்று!
அதே மூச்சில், நேர்மாறாகத் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் எண்ணுகிறான்.

Height of anger & depths of despair- both at once and in the same breath.

ஒரே சமயத்தில் எதிரும் புதிருமானஇரு மன நிலைகள் அனுமன் சிந்தனையிலே ஓடுவது கவிச் சக்ரவர்த்தியின் பாடலிலே மிகத் துல்லியமாக வெளிப்படுகிறது .

No comments: