Tuesday, December 8, 2009

ஆசிரியர் வணக்கம்

வட கோவையிலே உள்ள "ஸ்ரீ பல்தேவ்தாஸ் கிக்கானி வித்யா மந்திர் " பள்ளியிலே நான் பதினோராம் வகுப்பு படிக்க நேர்ந்தது. அப்பள்ளியில் எனக்கு தமிழ் வகுப்புக்களை நடத்திய நல்லாசிரியப் பெருந்தகை உயர்திரு.பழனிச்சாமி ஐயா அவர்கள். மிக நல்ல ஆசிரியர். அவரை மறக்கவே முடியாது! மானசீகமாக வணங்கி, அவரிடம் வாழ்த்துக் கோருகிறேன்! அவர் கற்பித்த கம்ப இராமாயணப் பாடல்களும் இதர செய்யுட்களும் இன்றளவும் எனது மனத்தை விட்டு நீங்கவில்லை.

கம்ப இராமாயணத்திலே, காட்சிப் படலம் எங்களுக்கு பாடப் பகுதி. ஸ்ரீ அனுமன், சீதாப் பிராட்டியை அசோக வனத்திலே காண்பதை விவரிக்கும் படலம் அது.
இப் படலத்திலே ஸ்ரீ அனுமனின் எண்ண ஓட்டங்களையும், அன்னை சீதையின் மன நிலையும் மிக அழகாக கம்ப நாட்டார் காட்டுவார்.
ஓவ்வொரு பாடலையும் ஆசிரியர் ஐயா விவரிப்பார்-கொள்ளை அழகு!
விவரிக்கும் பாங்கிலே, மகுடி ஓசைக்கு கட்டுப்பட்ட நாகங்கள் போல், வகுப்பு முழுதும் இருக்கும்-பீரியட் ஆரம்பித்தவுடனேயே முடிந்து விட்டது போலத்தோன்றும்-இன்னும் சற்று நேரம் தமிழ் வகுப்பு இருந்திருக்க கூடாதா என்று ஏங்க வைக்கும்.
அதை அடுத்து அனேகமாக இருந்தது கணித வகுப்புதான்-பலருக்கு அது எட்டிக்காய்- அதனாலோ என்னவோ,இந்த ஏக்கம் சற்று தூக்கலாகவே இருக்கும்!
எனது தமிழ் ஆர்வத்தைத் தூண்டியது அந்த நல்லாசிரியரது வகுப்புகள்தான். அவர் எங்களுக்கு கற்பித்த கம்பனின் காட்சிப் படலத்திலிருந்து ஒரு சில பாடல்களை வலையில் இனி வரும் நாட்களில் பதிவு செய்யலாம் என்று எண்ணம். ஆசிரியப் பெருமானின் ஆசிகளைக் கோரி ஆரம்பிக்கிறேன்! நீங்களும் படித்து ரசியுங்கள்- நனறாக விமரிசியுங்கள்- என்னை உங்களது கருத்துக்களால் உற்சாகப்படுத்துங்கள். நன்றி!

No comments: