Friday, December 11, 2009

விவேகானந்தரும் பெர்னார்ட்ஷாவும்

மேதை பெர்னார்ட் ஷா உருவத்தில் மிகச் சுமாரான தோற்றம் கொண்டவர். சிறந்த நா வன்மையும், மிகக் கூர்மையான அறிவும் படைத்தவர்
தன்னுடைய அறிவுத்திறன்மீது அபார நம்பிக்கை கொண்டிருந்த அளவுக்கு, தனது தோற்றத்தைப் பற்றியோ, உடை அணிதலைப் பற்றியோ, எப்போதும் ஒரு சிறிது கூட கவலை இருந்ததில்லை.
அவர் புகழின் உச்சியில் இருந்தபொது, தன் அழகு மீது கர்வம் கொண்டஒருபிரபல ஹாலிவுட்நடிகை,ஒரு பொது நிகழ்ச்சியின் முடிவில் பலரின் முன்னிலையில் பெர்னார்ட்ஷாவை அணுகி,சற்று கிண்டலாக, "நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?" என்றாள்.

" எதனால் இந்த சிந்தனை உங்களுக்கு?" என்று திரு ஷா கேட்டார் .

நடிகை சொன்னாள்- " என்னுடைய பேரழுகும், உங்களுடைய பிரமிக்கத்தக்க அறிவாற்றலும் கலந்த நம் சந்ததிகள் உருவாகும்; நமது புகழ் பரவும் !"

நடிகையின் சற்று கிண்டலான போக்கை உடனே புரிந்து கொண்ட திரு ஷா பதிலிறுத்தார்- "என்னுடைய அழகும், உங்களுடைய அறிவும் கொண்டு, குழந்தைகள் பிறந்தால் என்ன செய்வது?'

வாயடைத்துப்போன நடிகைக்கு மிகவும் அவமானமாகி விட்டது.அடுத்த நொடியில் அவளை அந்த இடத்தில் காணவில்லை!

வெகு சமீபத்தில் திரு.சுகி. சிவம் அவர்களது எழுத்து தொகுப்பு ஒன்றை வாசித்து கொண்டிருந்தேன்;

ஏறக்குறைய இதே போல ஒரு சம்பவம் சுவாமி விவேகானந்தர் வாழ்விலும் நடந்ததாக திரு சிவம் அந்த நூலில் குறிப்பிடுகிறார்.

விவேகானந்தரின் கம்பீரத்திலே மயங்கிய ஒரு மேலை நாட்டுப் பெண்மணி " நான் உங்களை மணம் செய்ய விரும்புகிறேன்" என்றாள்.

"எதனால் இந்த எண்ணம்?"- விவேகானந்தர்.

"உங்கள் அறிவு. .. உங்களை ஒத்த அறிவாளியான குழந்தை வேண்டும் என்றஆசைதான் காரணம்; உங்களை மணந்து கொண்டு உம்மைப்போன்ற அறிவாளியான மகனை நான் பெற்றெடுப்பேன்' என்றாள் அந்தப் பெண்மணி.

" அம்மா.... நமது திருமணம் நடந்து, குழந்தைகள் பிறந்து அவ்ர்களின் அறிவு பற்றி தெரிவதற்கு, ரொம்ப காலம் ஆகும்; உங்களுக்கு என்னைப்போன்ற அறிவாளியான மகனை இப்போதே தரட்டுமா?" என்றார் சுவாமி விவேகானந்தர்.

ஆச்சரியத்தின் உச்சிக்குச் சென்ற அந்தப் பெண்மணி "எப்படி?" என்று கேட்டாள்.

" தாயே ..இப்போதே என்னை உங்கள் மகனாகத் தருகிறேன். என்னை மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள் தாயே" என்றார்   சுவாமி விவேகானந்தர்.

திரு பெர்னார்ட் ஷாவின் பதிலுக்கும், சுவாமி விவேகானந்தரின் பதிலுக்கும்  எவ்வளவு வித்தியாசம்!

முந்தையது அறிவுக் கர்வத்தால் விளைந்தது; பிந்தையதோ அருளின் கனிவினால் மலர்ந்த பதில்!
 

No comments: