Sunday, December 13, 2009

காட்சிப் படலம்

இவ்வாறு மாறு பட்ட பல தீர்மானங்களைச் சிந்தித்துக் கொண்டு,அனுமன், குளிர்ந்த நிழலைத் தரும் அடர்த்தியான மரங்கள் நிரம்பிய அசோக வனத்தின் சமீபத்தை வந்து அடைந்தான். அப்போது,இராமன் அவதாரம் எடுத்ததின் நோக்கம் பூர்த்தியாகும் தருணம் நெருங்கிவிட்டதென உணர்ந்த தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி பூமழை பொழிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
"என்று, சோலை புக்கு எய்தினன், இராகவன் தூதன்;
ஒன்றி வானவர் பூமழை சொரிந்தனர் உவந்தார்;"
அந்த அசோக வனத்தினிலே இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையின் நிலையை கம்பர் கூறப் புகுகிறார்.
கம்பரின் சொற்களிலே சீதை சிறையிருக்கும் நிலையை எண்ணி தயக்கம் உண்டாகிறது- "சொல்லுவாம் துணிந்தாம்' என்கிறார்- மனது நடுங்குகிறது-இருந்த போதிலும் துணிச்சலை வருவித்துக்கொண்டு சொல்கிறேன் என அன்னை ஜானகியின் துயர நிலையை ஒரே சொல்லில் சொல்லாமல் சொல்லிவிடுகிறார் கம்பர்.
முழுப் பாடலையும் தந்திருக்கிறேன்:
"என்று, சோலை புக்கு எய்தினன், இராகவன் தூதன்;
ஒன்றி வானவர் பூமழை சொரிந்தனர் உவந்தார்;
அன்று, அவ் வாள் அரக்கன் சிறை அவ்வழி வைத்த
துன்றலோதிதன் நிலையினைச் சொல்லுவாம் துணிந்தாம்."

(அருஞ் சொற்கள்- துன்று- நெருங்கிய; அல்- இருள்; ஒதி- கூந்தல்; துன்றலோதி- அடர்த்தியான கருங்கூந்தலை உடையவள்)

No comments: