பழமொழிகள் பலவிதம் !. அவற்றை நாம் புரிந்து கொள்ளுவதும் பலவிதம்!.
" பிள்ளையார் பிடிக்க போய் குரங்காய் முடிந்தது "-
சாதாரணமாக, நாம் ஏதோ ஒன்றை செய்ய போய் அது ஏதோ ஒன்றாய் முடிந்து விடுவதுதான்- நமது மனதில் தோன்றும் உடனடி அர்த்தம். இந்த அர்த்தம் சரிதானா ?
நமது முன்னோர்கள் எதை செய்திருந்தாலும் சொல்லியிருந்தாலும் மேம்போக்காய் பார்த்தால் ஒரு விதமாயும்; அதையே சற்று ஆழ்ந்து நோக்கினால் மிக வித்யாசமான பொருள் உள்ளதாயும் புலப்படும். இந்த பழமொழியும் இதற்கு விதிவிலக்கு இல்லை . சற்று பார்ப்போம் !
"பிள்ளையாரை பிடித்துக் கொள்: நன்கு வேண்டிக் கொள். எல்லா காரியமும் நல்லபடியே நடக்கும் !" எத்தனை முறை வீட்டுப் பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்பிர்கள் இதனை ! பரமசிவனுமே திரிபுரம் எரிக்க செல்லும் போது பிள்ளையாரை வழிபட மறந்து கிளம்ப , அவர் பட்ட துன்பங்களை கதையாய் கேட்டிருப்பிர்கள் .
" முப்புரம் எரி செய்த அச்சிவனுறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா " என்பது திருப்புகழில் கணபதி துதியில் அருணகிரியார் வாக்கு . தடையை ஏற்படுத்திய பிள்ளையாரை, பிறகு சிவன் நினைந்து வழிபட, பிள்ளையார் விக்னங்களை விலக்கினார் என்பது கர்ண பரம்பரைக் கதை.
சிவனே பிள்ளையாரை வழிபடாமல் அந்த பாடு பட்டாரென்றால் நாம் எம்மாத்திரம் ? எனவே சிறிய செயல் என்றாலும் பெரிய செயல் என்றாலும் கணபதியை வழிபட்டுத்தான் செய்யத் துவங்க வேண்டும் என்பது பெரியவர்கள் சொல்லிய தீர்க்கமான அறிவுரை.
எந்த காரியத்தை செய்யும் முன்னரும் , செயல்கள் தடங்கல் இல்லாமல் நடக்க, முழு முதல் கடவுள் விநாயகரை நினைத்து செய்ய தொடங்குவது நமது வழி வழி வந்த ஒரு பழக்கம் .
இதெல்லாம் சரி! அதென்ன குரங்காய் முடியும் சமாச்சாரம். குரங்காய் முடிவதற்கு பிள்ளையாரை எதற்கு வழிபட வேண்டும்?.
ஆஞ்சநேயர் ஒரு வானரம் . சுக்ரீவனிடத்தில் மந்திரியாக இருந்தவர். புத்தி சாதுர்யம் மிக்கவர். மிக்க தைர்யசாலி-அபார தேக பலம் உள்ளவர்; ஜெயிக்க முடியாதவர்; வாக்குவன்மை பொருந்தியவர்; அசகாய சூரர்; அனாயாசமாக கடலைத் தாண்டியவர். தனி ஒரு ஆளாக இலங்கையை தீக்கிரையாக்கினவர். சஞ்சீவி மலையை பெயர்த்தெடுத்து தக்க சமயத்தில் யுத்த பூமிக்குக் கொண்டு வந்து ராமபிரானின் உயிர் மீட்டவர் .அன்னை சீதாப் பிராட்டியும் அண்ணல் ராம பிரானும் மறுபடியும் ஒன்று சேர காரணமாக இருந்தவர் . இவ்வளவு பெருமைகளுக்கு எல்லாம் உரியவராக இருந்தபோதிலும் ஒரு துளிக்கூட கர்வமே இல்லாதவர். தான் செய்ததெல்லாம் ராமபிரானின் அருளாலே சாதிக்கப்பட்டது என்ற அடக்கமான சுபாவம் உள்ளவராக இருந்த பரம பக்தர். இன்றளவும் எங்கெல்லாம் ராமாயணம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் இரு கை கூப்பி கண்களில் ஆனந்தப் பெருக்கெடுத்தோட சூட்சும ரூபத்தில் எழுந்தருளி செவிமடுப்பவர். சிரஞ்சீவி. தன்னடக்கம் - அதுதான் அவரது பெரும் சிறப்பு. ராமாயண மகா கதையிலே ஆஞ்சநேயரின் பங்கு ரொம்ப பெரியது -வார்த்தையில் அடக்க முடியாதது. அவர் செய்த செயல் யாவும் வெற்றியில் முடிந்தது. வெற்றியின் மறு பெயர் ஆஞ்சநேயர் -குரங்கர் - அதுதான் குரங்காய் முடிந்தது என்று சொல்லுவது.
எங்கே மறுபடியும் சொல்லிப் பாருங்களேன் - "பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது" - பிள்ளையாரை வேண்ட எல்லாம் ஜெயமாய் முடிந்தது- ஜெயமாய்முடியும் . இதுதான் பெரியவர்கள் நமக்கு சொல்லி போயிருப்பது. என்ன நான் சொல்லுவது சரிதானே?
Sunday, November 22, 2009
பிள்ளையார் பிடிக்க போய் குரங்காய் முடிந்தது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment