Saturday, November 28, 2009

காலத்தை வென்ற கவியரசு

"தேரேது? சிலையேது? திரு நாளேது?
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது?"

கவியரசு கண்ணதாசன் எழுத்திலே "பாசம்" படத்தில் பி. சுசீலாவின் இனிமையான குரலிலே வழங்கப்பட்ட பாட்டு.
இது கடந்த வாரம் பொதிகை தொலைகாட்சியில்  காலத்தை வென்ற கவியரசு நிகழ்ச்சியில ஒளி பரப்பாயிற்று. முனைவர் திரு.மோகன் அவர்களால் விளக்கப்பட்டது.

தேர், சிலை, திரு விழாக்கள் இவை அனைத்திற்கும் எதனால் மதிப்பு? தெய்வம் என்ற ஒரு பெரும் சக்தியை மனிதர்கள் கொண்டாடி திரு விழா, தேரோட்டம் இவையெல்லாம் செய்யும் போது தெய்வத்தின் பொருட்டாலே அவை மதிப்பு பெறுகின்றன. தெய்வம் என்ற ஒன்று இல்லாதிருப்பின் அல்லது அதை நாம் சட்டை செய்யாது இருப்பின் இவை யாவும் இருந்தும் இல்லாதது போலத்தானே! இவற்றுக்கு ஏது தனி மதிப்பு?

இதை விளக்கும் போது மேற்கோள் காட்டப்பட்ட சங்க காலப் பாடல் மிகவும் அருமை.

"இளையோர் சூடார், வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணண் சூடான், பாணிணி அணியாள்,
ஆண்மை தோன்ற , ஆடவர்க் கடந்த 
வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ? ஓல்லையூர் நாட்டே "
( பாடிய புலவர்- கீரத்தனார்-புற  நானூறு)

ஓல்லையூர் நாடு முல்லை மலர்கள் பூத்து குலுங்கும் நாடு. அந்த நாட்டை ஆண்டு வந்த மன்னன் "வல்வேல் சாத்தன்". போர்க்களத்திலே மிகுந்த வலிமையுடன் வேல் வீசக் கூடியவன். இரப்போர்க்கு இல்லையெனாது வாரி, வாரி, வழங்கும் வள்ளல். கலைகளையும் கலைஞர்களையும் மிகவும் ஆதரித்தவன்.அவனுடைய ஆதரவிலே திளைத்த பாவலர்களும் கலைஞர்களும் தங்களது சந்தோஷமான மனப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக எப்பொழுதும் முல்லை மலர்களை அணிந்து கொண்டும்; முல்லை மலர் எவ்வாறு எல்லா திசைகளிலும் மணம் வீசுகிறதோ அதே போல வல் வேல் சாத்தனின் புகழை பாடி பரப்பிக் கொண்டும் இருந்தார்கள். அவர்களது வாழ்வின் ஆதாரம் -மையம் -வல்வேல் சாத்தன். அவன் இருந்தால் அவர்கள் பெருமை பெறுவார்கள்-அவன் இல்லையெனில் வேறு யாதும் இருந்தும் - எதுவும் இல்லாதது போலத்தான்!

ஒரு சமயம் நடந்த போரிலே சாத்தன் வீழ்கிறான்-மாண்டு போகிறான். எங்கும் சோகம். எல்லோர் மனத்திலும் சோகம். யாவும் நின்று போயின.  அந்த நாளிலும் முல்லை பூக்கிறது- ஆனால் அதை சீந்துவோர்தான் இல்லை. இதைதான் புலவர் பாடிச் செல்கிறார் ""இளையோர் சூடார், வளையோர் கொய்யார்,பாணண் சூடான், பாணிணி அணியாள்,வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்,முல்லையும் பூத்தியோ ஓல்லையூர் நாட்டிலே".

இதே கருத்துதான் கவியரசின் மேலே சொன்ன சினிமா பாடலிலும் அவரால் கையாளப்பட்டிருக்கிறது.

Thursday, November 26, 2009

பொதிகை தொலைக்காட்சி

பொதிகை  தொலைக்காட்சி  சில மாதங்களாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு  ஒன்பது மணி முதல் கவிஞர் கண்ணதாசனைப் பற்றிய ஒரு மிக நல்ல நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. நிகழ்ச்சியானது நான்கு பகுதியாக பிரிக்கப்பட்டு காவியத்தலைவன், எனக்காகப் பாடினார், வாழ்க்கைத் துளிகள் , தனிப்பாடல்கள்   என்று தொடர்கிறது. பாடல்களின் தமிழ் இலக்கிய பின்னணியும் பாடல் எழுதப்பட்ட சூழ்நிலையும் தமிழ் பேராசிரியர்களால் விளக்கிச் சொல்லப்படும் போது நமக்கு  திரு கண்ணதாசனின்  தமிழ் ஆளுகை எத்தனை ஆழமானது என்று  புரிய வருகிறது. ஒரு சுகமான அனுபவம் . நீங்களும் பாருங்களேன் !

Monday, November 23, 2009

மார்கழி மாதம்

 சில தினங்களுக்கு முன் எனது தலைமை அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய ஒரு கடிதத்தில் கையொப்பம் இடுவதற்கு சக அதிகாரி என்னிடம் கோப்புக்களை அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் ஒரு இடத்தில் "மங்களமென்று கருதப்படாத மார்கழி மாதத்தில்" என்ற பொருள் தொனிக்கும்  பதப்பிரயோகம் இருந்தது. என் மனதை ஏதோ நெருடியது. அலுவலகங்களில் பல நூற்றுக் கணக்கான கடிதப் போக்குவரத்து இருக்கையில் இம்மாதிரி எழுதுவது என்பது சாதாரணமான சமாச்சாரம்தான். வேறு யாரேனும் எனது இடத்தில் இருந்திருந்தால் கையெழுத்திட்டு இருப்பார்களோ என்னவோ!- தெரியாது . ஆனால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடிதத்தை திருப்பி அனுப்பி விட்டேன் - ஒரு சிறு குறிப்புடன் .

நான் எழுதியது  இதுதான் :  "எல்லா மாதங்களைக் காட்டிலும் மார்கழி மாதம்  இறைவழிபாட்டிற்கு ஏற்ற மாதம். மாதங்களில்  நான் மார்கழி என்று கீதையில்  கண்ணன் அருளியிருக்கிறான். ஆண்டாள் திருப்பாவை  பாடி நோன்பு  நோற்றதும் மார்கழியில்தான்.  தன் அன்புக்குரிய காதலியை வருணிக்கும்போது காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி என்று பாடுவதாக கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதியுள்ளார். இவ்வாறிருக்க இச்சொல் பிரயோகம் எனக்கு சரியாகப் படவில்லை. தயவு செய்து மாற்றவும்."

அந்த அதிகாரி மறு முறை இந்த திருத்தங்களுடன் கடிதத்தை அனுப்பினார் - லெட்டர் சென்றது.. அந்த  அதிகாரி என்னை ஒரு உணர்ச்சி வசப்படும் ஆசாமியாக எண்ணியிருக்கக்கூடும். பகவான் கண்ணன், ஆண்டாள் இவர்கள் சொன்னதெல்லாம் விட்டு விட்டால் கூட காதலியைப் பற்றிப் பாடும்  எவரும் எந்த ஒருஅமங்கலப்  பொருளுடனும் ஒப்பு நோக்கி பாட மாட்டார்கள் . நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

Sunday, November 22, 2009

பிள்ளையார் பிடிக்க போய் குரங்காய் முடிந்தது

பழமொழிகள் பலவிதம் !. அவற்றை  நாம் புரிந்து கொள்ளுவதும்  பலவிதம்!.
" பிள்ளையார் பிடிக்க போய் குரங்காய்  முடிந்தது "- 
சாதாரணமாக, நாம்  ஏதோ ஒன்றை செய்ய போய் அது ஏதோ ஒன்றாய் முடிந்து விடுவதுதான்-  நமது மனதில் தோன்றும்  உடனடி அர்த்தம். இந்த அர்த்தம்  சரிதானா ?
நமது முன்னோர்கள் எதை செய்திருந்தாலும்  சொல்லியிருந்தாலும் மேம்போக்காய் பார்த்தால் ஒரு விதமாயும்; அதையே  சற்று  ஆழ்ந்து நோக்கினால் மிக வித்யாசமான பொருள் உள்ளதாயும் புலப்படும். இந்த பழமொழியும் இதற்கு விதிவிலக்கு இல்லை . சற்று பார்ப்போம் !

 "பிள்ளையாரை பிடித்துக் கொள்:  நன்கு வேண்டிக் கொள். எல்லா காரியமும்  நல்லபடியே நடக்கும் !" எத்தனை முறை வீட்டுப்  பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்பிர்கள் இதனை ! பரமசிவனுமே  திரிபுரம் எரிக்க செல்லும் போது பிள்ளையாரை  வழிபட மறந்து கிளம்ப , அவர்  பட்ட துன்பங்களை கதையாய்  கேட்டிருப்பிர்கள் .
 " முப்புரம் எரி செய்த அச்சிவனுறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா " என்பது  திருப்புகழில் கணபதி துதியில்  அருணகிரியார் வாக்கு . தடையை  ஏற்படுத்திய  பிள்ளையாரை, பிறகு சிவன் நினைந்து வழிபட, பிள்ளையார் விக்னங்களை விலக்கினார் என்பது கர்ண பரம்பரைக் கதை.
சிவனே பிள்ளையாரை வழிபடாமல்  அந்த பாடு  பட்டாரென்றால்  நாம் எம்மாத்திரம் ? எனவே சிறிய செயல் என்றாலும் பெரிய செயல் என்றாலும் கணபதியை வழிபட்டுத்தான்  செய்யத் துவங்க  வேண்டும் என்பது பெரியவர்கள் சொல்லிய தீர்க்கமான அறிவுரை.
எந்த காரியத்தை செய்யும் முன்னரும் ,  செயல்கள் தடங்கல் இல்லாமல் நடக்க, முழு முதல் கடவுள் விநாயகரை நினைத்து செய்ய தொடங்குவது நமது வழி வழி வந்த ஒரு பழக்கம் .

இதெல்லாம் சரி!  அதென்ன குரங்காய்  முடியும் சமாச்சாரம்.  குரங்காய் முடிவதற்கு பிள்ளையாரை எதற்கு வழிபட  வேண்டும்?.
ஆஞ்சநேயர் ஒரு வானரம் . சுக்ரீவனிடத்தில் மந்திரியாக இருந்தவர்.   புத்தி சாதுர்யம் மிக்கவர். மிக்க  தைர்யசாலி-அபார  தேக பலம் உள்ளவர்; ஜெயிக்க முடியாதவர்; வாக்குவன்மை பொருந்தியவர்;  அசகாய சூரர்; அனாயாசமாக கடலைத் தாண்டியவர். தனி ஒரு ஆளாக இலங்கையை தீக்கிரையாக்கினவர்.  சஞ்சீவி மலையை பெயர்த்தெடுத்து தக்க சமயத்தில் யுத்த பூமிக்குக் கொண்டு வந்து ராமபிரானின் உயிர் மீட்டவர் .அன்னை சீதாப்  பிராட்டியும்  அண்ணல் ராம பிரானும் மறுபடியும் ஒன்று சேர காரணமாக இருந்தவர் . இவ்வளவு பெருமைகளுக்கு எல்லாம் உரியவராக இருந்தபோதிலும் ஒரு துளிக்கூட கர்வமே இல்லாதவர். தான் செய்ததெல்லாம் ராமபிரானின் அருளாலே சாதிக்கப்பட்டது என்ற அடக்கமான சுபாவம் உள்ளவராக இருந்த பரம பக்தர். இன்றளவும் எங்கெல்லாம் ராமாயணம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் இரு கை கூப்பி  கண்களில் ஆனந்தப் பெருக்கெடுத்தோட சூட்சும ரூபத்தில் எழுந்தருளி செவிமடுப்பவர். சிரஞ்சீவி. தன்னடக்கம் - அதுதான் அவரது பெரும் சிறப்பு. ராமாயண மகா கதையிலே ஆஞ்சநேயரின் பங்கு ரொம்ப பெரியது -வார்த்தையில் அடக்க முடியாதது. அவர் செய்த  செயல் யாவும் வெற்றியில் முடிந்தது. வெற்றியின் மறு பெயர் ஆஞ்சநேயர் -குரங்கர் - அதுதான்  குரங்காய் முடிந்தது என்று சொல்லுவது.
எங்கே மறுபடியும் சொல்லிப் பாருங்களேன் - "பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது" -  பிள்ளையாரை வேண்ட எல்லாம் ஜெயமாய் முடிந்தது- ஜெயமாய்முடியும்  . இதுதான் பெரியவர்கள் நமக்கு சொல்லி போயிருப்பது.  என்ன நான் சொல்லுவது சரிதானே?